வெள்ளி, 5 ஏப்ரல், 2024

ஆன்மா ஞானம் விளங்க குருஅருள் பெறுதல்


 ஆன்மா ஞானம் விளங்க குருஅருள் பெறுதல்

  இறைவன் திருவருளால் ஆன்மா பல்வேறு பிறவிகளிலே பிறந்தும் இறந்தும் இரு வினைகளைப் புரிந்தும் அவ்வினைகளின் பயன்களை அநுபவித்து வருகின்ற சகல நிலை நீங்குவதற்கு, இருவினை ஒப்பு, மலபரிபாகம, சத்தி நிபாதம் இவற்றின்  வழி முதல்வனது ஞானம் விளங்க அந்தஞானத்தின் முன் மாயா கருவிகளும் மாயா உலகமும் புலனாகாது முதல்வனது நிறைவில் தோய்ந்து நிற்பது சுத்த நிலை எனப்படும் இந்நிலையில் தான் உயிராகி ஆன்மா முத்திக்கு தகுதியடைந்து தயாராக உள்ள நிலை

 பாசப்பற்று விடுதற்பொருட்டும், முதல்வன் பேரருளை அடைவதற்கும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நால்வகை நெறிகள் துணைபுரிகின்றன. உலகப்பயன் நோக்கி சிவனை வழிபடுதல் உபாயம் என்றும்,அப் பயன்கள் யாதொன்றயும் விரும்பாது அன்பே காரணமாக சிவனை வழிபடுதல் உண்மை என்றும் கூறப்படும். இச்செயலே சிவ புண்ணியத்தை விளைவிக்கும் இச் சிவ புண்ணியங்களால் இருவினை ஒப்பும், இருவினையொப்பால் மலபரிபாகமும், சத்திநிபாதமும் நிகழும், இம்மூன்றும் முன்னும் பின்னும் அல்லது ஏக காலத்தில் நிகழலாம் இதுவேஞானம் பெறுவதற்குரிய பக்குவ நிலையாகும். 

  இருவினையொப்பு ;சரியை, முதலிய தவங்களின் வழி நல்வினைப்பயனாகிய இன்பத்தில் விருப்பும், தீவினைப்பயனாகிய துன்பத்தில் வெறுப்பும் கொள்ளாது, அவற்றால் உள்ளம் வேறுபடாது ஒன்றுபோல கருதி அவற்றின் மேல் பற்றுச் செய்யாது இருக்கும் மனநிலை உண்டாகும். அதுவே இருவினை ஒப்பு ஆகும். இது "ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நாேக்குதல் " என சொல்லப்படும். இதனால் ஆன்மாவிற்கு  ஞான வேட்கை உண்டாகும்.

மலபரிபாகம் 

   இருவினை ஒப்பாவது அனுக்கிரக காரணம் அன்று, மலபரிபாகம் படுவதற்கே துணையாகும்,இருவினை ஒப்பு நிகழவே ஆணவத்தின் சத்தி மெலிந்து ஆன்மாவின் அறிவைத் தடுத்து ைவத்திருந்த அதன்பிணிப்பு நெகிழ்ந்து நீங்கும் நிலையை அடையும், அந்நிலை " மலபரிபாகம்" எனப்படும். பரிபாகம் என்பதற்கு பக்குவம் என்று பொருள். மலசக்தி நீங்கக்கூடிய பக்குவத்தை அடைந்தள்ளது என்பதைக் குறிக்கும்.

சத்தி நிபாதம்

   மலப்பரிபாகம் சிறிது சிறிதாக நிகழ நிகழ அதற்கேற்ப அதுவரை ஆன்மாவில் மறைந்திருந்து பக்குவப்படுத்தி வந்த திரோதன சத்தி சிறிது சிறிதாகத் தன் தன்மை மாறி அருட் சக்தியாக மாறும். மலசத்தி தேய்நது வரும்நிலையை மலபரிபாகம் என்றாற்போல அருட்சத்தி விளங்கி வரும் நிலையை "சத்திநிபாதம்" என்பர் , இது மலபரிபாகத்தின் தன்மையைப் பொறுத்துத்தான் சித்திநிபாதம் நிகழும்.இதனை சத்தி வீ்ழ்தல் என்பது பொருளாகும். இதனை சத்தி  வீழ்ச்சி என்பதற்கு மக்கள் கூட்டம் கூடியிருந்த ஒரு கூட்டத்தில் ஒரு கல் அக்கூட்டத்தில் வீழ்ந்தால் என்னவாகும் மக்கள் எல்லாம் அஞ்சி அகல ஒதுங்குவார்கள். அதுபாேல சத்திநிபாதம்ஒருவருக்கு நிகழுமாயின் உலகியல் உணர்வில் ஓர் அதிர்ச்சி உண்டாக உலகியலில் இருந்து நீங்குவதாகும். எனவே சத்தி வீழ்ச்சி என்றே கூறப்படுகிறது. இந்த சத்திநிபாதம் ஆன்மாவின் பக்குவநிலைக்கு ஏற்ப மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என படிமுறைகளல் உயர்ந்து நிற்கும். இவ்வாறு ஆன்மா ஞானம் பெறுவதற்கு இருவினை ஒப்பு, மலபரிபாகம், சத்திநிபாதம் எல்லாம் ஆன்மாவின் அறிவினில் விளங்குதல் வேண்டும். அப்போதுதான் ஆன்மா ஞானம் பெறுவதற்கான படிநிலையை அடையும்.

 குருவருள்

 இறைவனது அருளே உயிர்க்கு அருளவேண்டி வடிவு கொள்கிறது. உயிர் பெத்தநிலையில் திரோதன சத்தியையும், முத்தியில் தடையில்லாத சிவஞான சத்தியையும் உருவாகக் கொண்டு உயி்ர்கட்கு அருள்புரிய  கர்த்தா ஆசாரிய மூர்த்தமாய் திருமேனி கொண்டு எழுந்தருளி மயக்கமாய் வந்து, தடுக்கும் கேவலம், விகற்பமாய் வந்து தடுக்கும் சகலம் ஆகிய நிலைகள் சேராதவாறு அருளில் நிறுத்தி மலங்களை போக்கியருள்வான். அதனால் ஆன்மா தன்னுடைய சிற்றறிவினை ஒழித்து மெய்ஞானம்பெறும். பெருகிய ஞானத்தால் பெருமானின் திருவடியை அடைந்து பேரின்பத்தில் திளைக்கும். சுத்த நிலையாகிய இந்நிலையே பிறவி ஒழிந்த இறைவனோடு கலந்திருக்கும் அருள்நிலையாகும்.  இவ்வருள்நிலை, சரியை, கிரியை, யோகம் நிலைகளில் நின்று முதிர்ச்சி பெற்ற ருக்கே வாய்க்கும் என்று சிவ ஆகமங்கள் சொல்லும்.

திருச்சிற்றம்பலம்

நன்றி சிவப்பிரகாசம் நன்நூல்

செவ்வாய், 12 மார்ச், 2024

சொல்லும் நா நமச்சிவாயவே

 நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு



தற்காலத்தில் கிரகங்களும் நட்சத்திரங்களும் (நாளும் கோளும்) சரியில்லை என்று வருத்தப்பட்டு அலைந்து திரிந்து இதனால் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பலர். இதனால் சிவன் கோவில்களில் நவக்கிரங்களின் வழிபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாம் அனுதினமும் காணும் உண்மை. இது பற்றிக் கடவுளைக் கண்டவர்கள் கூறியுள்ள உண்மைகள் யாவை என்பதை காண்போம்.


"ஆளும் ஆதிப்பிரான் அடிகள் அடைந்து ஏத்தவே

கோளு நாளவை போயறுங் குற்றமில்லார்களே" திரு ஞான சம்பந்தர் த.வே.2


தற்காலத்தில் மக்கள் கோள்கள் தான் தங்களுக்கு நன்மையைச் செய்யும் என்று நினைத்து அவற்றையே பெருந்தெய்வமாக கருதி (முழுமுதற் பொருளாக) வழிபட்டும் வருகிறார்கள். இது முற்றிலும் பொருந்தாத செயலாகும்.

கோள்கள் யாவும் தமக்குவமை இல்லாத சிவபெருமானாரை வணங்கியே கிரகப்பதங்கள் பெற்றுள்ளன. இவை யாவும் சிவபெருமானாருடைய ஆனையின்படி செயல்படக்கூடியவை என்பதை நாம் முதலில் மனதில் கொள்ள வேண்டும்


" சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை

அவனொடு ஒப்பர் இங்கு யாவரும் இல்லை .............. திருமந்திரம் த,வே, 10


அயலும் புடையும் எம் ஆதியை நோக்கில்

இயலும் பெருந்தெய்வம் யாதும் ஒன்றில்லை " திருமந்திரம்


பிறப்பும் இறப்பும் ஆதியும் அந்தமும் முதலும் முடிவும் இல்லாதவர் சிவபெருமானார் ஒருவரே ஆவார். இவரைத்தான் பெருந்தெய்வம் என்றும், முழுமுதற் பொருள் என்றும் கூறுகிறோம். இவரை வழிபட்டால் நவக்கிரகங்கள் நம்மை ஒன்றும் செய்யா. மேலும் நமக்கு நன்மைகளைச் செய்யும் என்று சொல்கிறார் மூன்று வயதில் ஞானப்பால் ஊட்டப் பெற்ற திருஞானசம்பந்தர்


" ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே

ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே" ........... ஞானசம்பந்தர் கோளாரு பதிகம்


சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்கிரன், சனி , இராகு,கேது ஆகிய ஒன்பது கிரகங்களும் சிவபெருமானாரை வணங்குபவர்கட்கு நன்மைகளைச் செய்யும் என்பது கடவுளை கண்ட சம்பந்த சுவாமிகள் திருவாக்கு ஆகும்.

போலிவேடதாரிகளை நம்பி வேண்டாப் பொருளற்ற சடங்குகளைச் செய்து காலத்தையும், செல்வத்தையும் வீண் செய்ய வேண்டாம். கடவுள் நிலையறிந்து அம்மயமான அருளாளர்கள் கூறியுள்ளனவற்றை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.


திருமுறைப் பாடல்கள் பாடியே இறைவரை நாம் வணங்க வேண்டும். நமக்கு பசி வந்தால் நாம் தான் சாப்பிட வேண்டும். நமக்கு நோய் வந்தால் நாம் தான் மருந்து உட்கொள்ள வேண்டும் நமக்கு தாகம் எடுத்தால் நாம்தான் தண்ணீர் குடிக்க வேண்டும். இதைப்போல நம்முடைய தீயவினைகள் நீங்கி நல்வினை பெருகி நலம் பெறுவதற்கு நாம்தான் பாடிப்பரவ (வணங்க ) வேண்டும்.


"பாட்டினால் பணிந்து ஏத்திட வல்லவர்

ஓட்டினார் வினை ஓல்லையே" .............. ஞான சம்பந்தர் தி,முறை 1


உலகில் எண்ணாயிரம் கோடி சீவராசிகள் உள்ளன. அவற்றுள் பேசும் திறம் பெற்றுள்ளவன் மனிதன் மட்டுமே. அதனால் வாயினால் பாடி வணங்குவதுதான் நலம் தருவதாகும்.

" நீரார் சடையானை நித்தல் ஏத்துவான்

தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே" .................... ஞான சம்பந்தர் தி.மு. 1


ஒன்பது கோள்களும் சிவபெருமானாரை வழிபட்ட தலங்கள் பற்றியும், அத்தலங்களுக்குரிய பதிகங்களையும் " தமிழ் மாலைகள் மண்ணிற்கும் விண்ணிற்கும் " எனும் நூலில் காணலாம்.


பொதுவாக மக்கள் துன்பங்கள் வரத் தொடங்கும் பொழுது கிரகங்கள் பற்றியும், தாங்கள் வாழுமிடங்கள் பற்றியும் சிந்திக்க ஆரம்பிக்கின்றனர்.

" நோய்எல்லாம் நோய் செய்தார் மேலவாம்" எஎன்பது திருக்குறள்


பிற உயிர்கட்கு ஏற்கனவே நாம் செய்துள்ள துன்பங்கள்தான் இப்பொழுது நமக்கு வருகின்றன என்பதை தான் மறுக்க முடியாத உண்மை.


"இன்பம் இடர் என்று இரண்டுற வைத்தது

முன்பவர் செய்கையினால் முடிந்தது" ,,,,,,,,,,,,,,,,,,,,,,,, திருமந்திரம்


எந்த வகையில் துன்பங்கள் வருகின்றனவோ அந்த வகையில் முற்பிறவிகளில் நாம் பிற உயிர்கட்குத் துன்பங்கள் செய்கின்றோம் என்று உணர வேண்டும், இப்பொழுது அவ்வகையில் புண்ணியங்களைச் செய்துவிட வேண்டும்.


நாம் ஏற்கனவே செய்துள்ள புண்ணியத்தால் இப்பொழுது இன்பங்களை அனுபவித்து வருகின்றோம். புண்ணியம் முடிந்து விட்ட பொழுது, துன்பங்கள் தொடர ஆரம்பிக்கின்றன.ஆதலால், அன்றாடம் புண்ணியங்களை செய்து கொண்டே இருக்க வேண்டும் ( வங்கியில் நம் கணக்கில் பணம் போட்டுக் கொண்டே இருப்பது போல)

விதைத்தைத் தான் அறுவடை செய்கிறோம். முள்ளை விதைத்தால் நெல்லை எதிர்பார்த்தால் கிடைக்காது தானே? புண்ணியத்தால் நற்செயல்களால் நலன்கள் பல பெறலாம் இதுவன்றி வெற்றுச் சடங்குகளால் பெற்றுவிட முடியாது.


எங்குச் சென்றாலும் நம்முடைய நிழல் நம்மைத் தொடர்வது போலு, நாம் செய்யும் நல்லனவும் தீயனவும் நம்மைத் தொடர்ந்து வரும். இதை உணர்ந்து விட்டால், போலித் துறவிகளிடம் சென்று ஏமாற மாட்டோம். ஏழைகட்கு உதவும் செல்வந்தர் நீண்ட நன்மையை தேடிக் கொள்கிறார். என்பதை மனதில் கெர்ள்ள வேண்டும், நாம் நன்மைகளைப் பெற்று நலமாக வாழ்வதன் பொருட்டுப் பிற உயிர்கட்கு கனவிலும் தீமையை நினைக்க க் கூடாது. அனுதினமும் " சிவாயநம" எனும் திருஐந்தெழுத்து மந்திரத்தை நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சொல்லில் நலமாக வாழலாம் என்பது ஞானசம்பந்தர் சொல்வது போல் உண்மை. இவர்கள் வானில் அரசாழ்வார் என்பது சம்பந்தரின் கட்டளை. நமசிவாய என்று நாம் மனத்தால் உச்சரிக்க மறந்தாலும் நம் நாக்கு அதனை அனிச்சை செயலாகக் கொண்டு சொல்லும்படி பழக்கப்படுத்திக் கொள்ள ேவண்டும் என்கிறார் சுந்தரர் பாண்டி பதிகத்தில் "..... நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே " என்கிறார்.


திருச்சிற்றம்பலம்

நன்றி: தமிழ் வேதம்

செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

சிவ பூசை

 சிவ பூசை



சிவ பூசை தோன்றி வகையினை கூறும் சேக்கிழார் பெருமான்

 " எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் வரும்பும் 

  உண்மையாவது பூசனை என உரைத்தருள

  அண்ணலார் தனை யர்ச்சனை புரிய அவதரித்தாள்

  பெண்ணின் நல்லவளாயின பெருந்தவக் கொழுந்தே "  பெரியபுராணம்

இவ்வாறு இறைவனை திருப்தி படுத்துவது சிவபூசையே என்பது வளிங்கும்

  நாம் முற்பிறப்பிற் செய்த புண்ணியக் காரணமாக பெறுதற்கரிய இம் மானுட தேகத்தை பராபர முதல்வன் பரமசிவன் நமக்கு தந்து வைதிக சைவ சித்தாந்த சமயத்திலே ஜனனமாக திருவருள் பாலித்தருனார். நமக்கு இம்மானுட தேகத்தை சிவ பெருமான் தந்தது சரியை, கிரியை, யோகம் என்னும் புண்ணியங்களைச் செய்து தம்மை வழிபட்டு சிவஞானத்தை தரும் பொருட்டேயாகும்.

   சரியை,கிரியை , யாேகம், ஞானம் என்னும் நான்கும் படிமுறையில் அரும்பும், பூவும், காயும், கனியும் போன்று ஒன்றுக்கொன்று தொடர்ச்சியும் ஏற்றமும் உடையன.

 அது, 

"விரும்புஞ் சரியை முதன் மெஞ்ஞான நான்கும் அரும்பு மலர் காய் கனி போன்றே பராபரமே"  என்னும்தாயுமான சுவாமிகள் திருவாக்காம்.

 அவற்றுள் சரியை யாவது புறத்தொழில் மாத்திரையான சிவபெருமானுடைய உருவத் திருமேனியை நோக்கி வழிபடுவதாம்.

  கிரியையாவது ஆசாரியரிடத்திலே விசேட தீட்சை பெற்று, அருவுருவத்திருமேனி ஆகிய சிவலிங்க பெருமானை ஏற்றி அகத்தொழில், புறத்ெதாழில் என்னும் இரண்டாலும் வழிபடுவதாம்.

  அது ஆணவமலத்தை நீக்கி பிறவியொழிந்து மோட்சத்தை தரும்படி தூபம் தீபம் சந்தனம், புஸ்பம் திருமஞ்சனம் முதலிய பூசோபகரங்களைக்கொண்டு பஞ்ச சுத்தி செய்து அகமும், புறமும்பூசித்து, அக்கினி காரியமும் பண்ணி சிவபெருமானுடய வரத அத்தத்தில்உடல் பொருள் ஆவி மூன்றையும் ஒப்பித்தாலாகிய சிவபூசையாம்.

  மந்திரம், கிரியை, பாவனைகளால் மனம், மொழி காயம் என்னும்மூன்றும் ஒருமித்து மெய்யன்போடு கிரியை ெசய்தல் வேண்டும். அன்பின்றி செய்யும் கிரியையால் பயனிலதாம்  அன்பு முக்கியம் என்பது

 "கோடி தீர்த்தம் கலந்து குளித்தவை

ஆடினாலும் அரனுக்கன்பில்லையேனில்

ஓடு நீரினை ஓட்டைக்குடத்தட்டி

மூடிவைத்திட்ட மூர்க்கனை யொக்குமே ,,,,,, என்றும்

   " நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும்  பொன்னார் சடைபுண்ணியன்

பொக்கமிக்கவர் பூவும் நீரும் கொண்டு நக்குநிற்பனவர் தம்மை நாணியே 

 என வரும்திருநாவுக்கரசர் திருத்தேவாரத்தால் உணரப்படும்

 பிறக்கும் பொழுதும் பின் இறக்கும் பொழுதும் அதற்கிடை காலத்திலும்அனுபவி்க்கும் துன்பத்தை ஒரு அறிஞன் சிந்தித்தால்பிறவாதிருத்தல் தவிர வேறு ஒன்றும்வேண்டவே வேண்டாமென்று முடிவிற்கே வரக்கூடும். 

    இருப்பினும் அப்பிறவிகளிலும் மானிடப்பிறவியே மேலான தென்று கருதப்படுகிறது. இப்பிறவி தப்பின் எப்பிறவி வாய்க்குமோ என்றனர் மேலோர்.

 ,,,,,,..... இனித்தமுடைய பொற்பாதம் காணப்பெற்றால் மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே என்கிறார் அப்பரடிகள்

  மானிட பிறவி பெற்று பாசம் விடுவித்து பெறுவதற்கு கிடைத்த மானிட பிறவி கொண்டு சிவபூசை செய்வது ஒன்றே வழி

திருச்சிற்றம்பலம்

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

முக்தி பெற எளிய வழி

 முக்தி பெற எளிய வழி

அரிது அரிது மானிடராய் பிறத்தல் என்கிறார் அவ்வை. மனித பிறவி உயர்வானது, உண்ணதமானது. காரணம் வேறு எந்த பிறவியிலும் கிடைக்காத முக்தி என்ற மோட்சம் இந்த மனிதப்பிறவியில் நாம் அடையமுடியும், அதனால் தான் பல மகான்கள், சித்தர்கள், ஞானிகள் கிடைத்த இந்த மானிடப் பிறவியில் பக்தியாலும், இறைவழிபாட்டாலும் ஈடுபடுத்தி முக்தி என்ற பேரானந்தம் கண்டனர். ஐயா நான் சாதாரண மனிதன் எனக்கு குடும்பம் இருக்கிறது. வீடு இருக்கிறது, பிழைப்பு இருக்கு, நாம் எப்படி சதா காலமும் பக்தி செய்யமுடியும்? எப்படி இறைவனை நினைத்துக் கொண்டே இருக்க முடியும்? இப்படி பலர் கேட்பதும் வாழ்வியல் நியாயமே. இப்படிப்பட்டவர்களும் எளியதாக முக்தி பெறலாம். அதற்கு எளிய வழிகளை மகான்கள் கூறியுள்ளார்கள்.

      பஞ்ச பூத தலங்களில் ஆகாயத்தலமாக விளங்குவது சிதம்பரம். சிதம்பரம் என்னும் கனக சபாபதி தலம். இந்த சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை போன்ற நாட்களில் நடைபெறும் நடராஜ மூர்த்தியின் ஆனந்த தாண்டவத்தை பக்தியோடு மனம் குளிர தரிசனம் செய்து, எனக்கு மறு பிறவி இல்லாத முக்தியை தந்து அருள் புரிய வேண்டும் என்று நடராஜ மூர்த்தியிடம் பிராத்தித்துக் கொண்டால் , மறு பிறவி இல்லாத முக்தி கிடைத்து விடும்.

      2015 - 1 (2) (1).jpg திருவாரூர் தலத்தில் நல்ல உயர்ந்த தாய்தந்தையர்களுக்கு பிள்ளையாய் பிறவி எடுத்தால், திருவாரூரில் பிறக்கும் அனைத்து ஜீவன்களுக்கும் முக்தி கிடைக்கும். திருவாரூரில் பிறந்த அனவைருக்கும் முக்தி கிடைக்கும் என்கிறது சாஸ்திரம்.

” காசியில் இறக்க முக்தி
திருவாரூரில் பிறக்க முக்தி
தில்லையில் தரிசிக்க முக்தி
(திரு) அண்ணாமலயைில் நினைக்க முக்தி ” என்கிறது சாஸ்திரம்

LOR17V
புண்ணிய நதி கங்கா நதி பெங்கி ஓடும் கைலாச வாசியான சிவன் தனது கணங்களுடன் விசுவநாதராக அன்னபூரணி உடன் எழுந்தருளியிருக்கும் தலமான உத்திரபிரதேச மாநில வாராணசி என்னும் காசி தலத்தில் உடலிருந்து ஜீவன் பிறியும் அனைத்து ஜீவன்களுக்கும்தாரக பிரம்ம மாகிய ஸ்ரீசீதா ராமச்சந்திர மூர்த்தியே நேரிடையாக அருள் வழங்கி மறுபிறவி அற்ற முக்தியை வழங்குகிறார். என்கிறது சாஸ்திரம், ஆகவே காசியில் இறக்க முக்தி என்கிறது சாஸ்திரம். ஒருவர் இறக்கும்சமயத்தில் அவனது மகன், இறப்பவரின்அருகில் இருந்து பணிவிடைகள் செய்தும் இறுதி காலத்தில் பெற்றோருக்கு வாயில் பால் விட்டு அவரை தன் வலது தொடையில் கிடத்தி வைத்துக் கொண்டு அவரது வலது காதில் கர்ண மந்திரங்களையும் , பகவான் நாமங்களையும் கூறி அவரை நல்ல நினைவுடன் இறக்கும்படி செய்தால், இறப்பவர் நிச்சயம் முக்தியை அடைவர் என்கிறது சாஸ்திரம்.

 f08d0-anmiga2bthuligal2b5

அடுத்ததாக இறைவன் ஆதியும் அந்தமும் இல்லாது தீப ஜோதியாய் காட்சி தந்த அண்ணாமலை என்னும்திருத்தலத்தில் இறைவன் ஜோதியாய் காட்சி தரும் கார்த்திகை தீபம் தரிசனம் கண்டோ, அல்லது அவனது திருவடியினை அனுதினமும் மனமார நிைத்து வணங்கினால் அந்த ஜீவனுக்கு அண்ணாமலையார் முக்தி அருள்கிறார் என்கிறது சாஸ்திரம்,
இந்த நான்கு வழிகளில் எது சிறந்தது எது எளியது என்பது தங்களுக்கே விளங்கும்
திருவாரூரில் பிறத்தல் என்பது நம்கையில் இல்லை, அது போல் காசியில் இறப்பது என்பது நம் கையில் இல்லை. பிறப்பும் இறப்பும் ஈசன் செயலாகும். மீதமுள்ள தரிசித்தல் – வழிபடுதல், எப்போதும் அவன் திருவடியே சரணம் என்று நினைத்தலும் மானிட பிறவி எடுத்த நம்மால் இயலும், எனவே தில்லை நடராஜ பெருமானை மனம் உருகி வழிபட்டும், அண்ணாமலையாரை அனுதினமும் சர்வ காலமும் அவன் திருத்தாள சரணடைய நினைத்தும் பிறவி இல்லா முக்தி அடைய வழி உள்ளது என்பதை காணலாம்.
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய ஓம்
தொகுப்பு: வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

பண்டார சாத்திரங் காட்டும் " தச காரியம் "

 பண்டார சாத்திரங் காட்டும் " தச காரியம் "



  சிவபுண்ணியங்களாகிய சரியை, கிரியை, யோகங்களை முற்றவித்தால் அவற்றின் பயனாக இருவினை ஒப்பு, மலபரிபாகம் நிகழ்ந்து, சக்திநிபாதம் உண்டாகும். சக்தி நிபாதம் ஏற்படும் போது அது காணும் திரோதன சக்தியாய் விளங்கிவந்த சிவ சக்தி அந் நிலையினின்று நீங்கி கருணை நிறைந்த அருட் சத்தியாக விளங்கும்.

   சிவாகம அறிஞர்கள் பொருள்களை பதி, பசு, பாசம் என்று மூன்றாக சொல்வார்கள்.  அவற்றினுள் பசுவாகிய ஆன்மா பாசத்தையோ, அல்லது பதியையோ சார்ந்து விளங்குமே அன்றி தன்மயமாக தனித்து விளங்கும் திறன்அற்றது. ஆன்மாவானது பாசத்தை சார்ந்த போது பாசமாகவும், பதியை சார்ந்தபோது பதியாகவும், விளங்கினாலும், பாசத்தை சார்ந்தபோது அந்த பாசமாகிய ஆணவ மலத்தால் மறைப்புண்டு நுணுகி கிடக்கும். பதி அருளால் மாயையின் சார்பற்று வினைக்கீடாய் பிறவிகளில் செல்லும். இத்துன்பத்தினின்றும் நீங்கும் பொருட்டு பதிக்கு கீழான கதி என்று மதிக்கத்தக்க அவத்தைகளை பத்தாக (தச காரியம் ) கூறப்படுகிறது.

 இந்த பத்து அவத்தை (படிநிலை) யே தசகாரியம் என்படும். தச (பத்து) காரியம் (நிலை) அந்த தச காரியங்களாவன;

  1.தத்துவ ரூபம், 2, தத்துவ தரிசனம், 3. தத்துவ சுத்தி

 4. ஆன்ம ரூபம், 5. ஆன்ம தரிசனம்,  6. ஆன்ம சுத்தி

 7. சிவரூபம்,  8. சிவ தரிசனம், 9. சிவயோகம், 10. சிவபோகம் என்பன

    பாசக் கருவியாகிய முப்பத்தாறு தத்துவங்களையும் பகுத்தறிந்து தனித்தனியே அவற்றின் தொழிலை அறிதல் - தத்துவ ரூபம்,

   ஆராய்ந்தால் அத்தத்துவங்களுக்கு ஒரு செயலும் இல்லை என உணர்தல் /  தத்துதரிசனம்

   அறிவுடைய ஆன்மா இவற்றின் இயலாமையையும் உணர்ந்து, தத்துவங்களில் பற்றற்று  நிற்றல் -  தத்துவ சுத்தி

  மலவலிகுன்றி ஆன்மா தன்னறிவாய் விளங்கி, முப்பொருள் உண்டென தோன்றும் நலையே - ஆன்ம ரூபம்

  திருவருள் விளக்கம் பெறுவதே தன்னறிவு என ஆன்மாவாகிய உன்னை உள்ளவாறு அறிதல் - ஆன்ம தரிசனம்.

  திருவருளை நினைந்து அதுவே எப்போதும்துணை நின்று காட்டுவது என தெளிந்து அருளில் அழுந்துதல்  - ஆன்ம சுத்தி

  ஆன்மா மூன்று விதமான ஞானங்களுள் ஆராய்ந்து மேலானதாக விளங்கும் சிவஞானத்தை உணர்ந்து நிற்றல் - சிவரூபம்

  சிவஞானத்தை உணர்ந்த அதன் வாயிலாக சிவமாகிய தன்னை ஆன்மாவுக்கு காட்டி நிற்றல் - சிவ தரிசனம்

  அவ்வான்மா மல வாதனையால் விளையும் பேத ஞானம் (திரிபுர உணர்வு) காணாதவாறு தன்னையே உணர்த்தி நிற்றல் - சிவயோகம்,

  சிவபோகத்தினை சிவம் காட்டும் உபகாரம், காணும்உபகாரம் எனும் இரண்டும் செய்து விளைவித்து நிற்றல் - சிவபோகம்.

 ( ஆன்மாவின் கண்போல காட்சியை காட்டி, அக்கண்ணோடு உடன  இயந்து காண்பது போல)

  ஞான ஒளிமயமான ஞாதிருவே திருமேனி தாங்கி எழுந்தருளி வந்த ஆசாரிய மூர்த்தி  உபதேசித்து அருளிய இப் பத்து அவத்தைகளையும் ஆன்மா தெளிவாக அறிந்து கொள்ளல்

  இவ்வாறு தசகாரியங்களையும் பயின்று மெய் பொருளாகிய சிவத்தினை பெற்றோர் இப்பிறப்பிலேயே பரமுத்தி அடைந்திடுவர். சாதனைகளில் நின்று வருவோர் உடல் பிரியும் காலத்தி்ல் முக்தி எய்துவர்.

திருச்சிற்றம்பலம்

நன்றி ; தட்சினாமூர்த்தி தேசிகர் அருளிய தசகாரியம் பாடல் 4- 10


சனி, 20 ஜனவரி, 2024

சைவ சித்தாந்த முத்துக்கள்

 


சைவ சித்தாந்த முத்துக்கள்

                             ஆன்மாவாகிய உயிர் வீடு பேறு உய்யும் முறை
  ஆன்மாவாகிய உயிர் இறைவனின் திருவடி பேறு அடைய  சரியை,கிரியை, யோகம் என்ற தவம் செய்து ஞான அறிவு தெளிிந்து, இச்சை என்னும் பக்தியால் அன்பு செய்தும்,செயல் என்னும் தொண்டினால் பணிந்து ஏத்தியும வழிபடுதல் வேண்டும் பணிதலால் பாசம் நீங்கி, பரவுவதால்  வீடுபேறு கிட்டும். கீழ்கண்ட ஐந்து வழிகளால் வீடு பேறு அடைய முடியும் என்கிறது மெய்கண்டாரின் சிவஞானபோதம்
 1.பிறவி துன்பத்தை உயிர்கள் உணர்தல். பல பிணிகளை உடைய உடலில் உள்ள உயிர் அதிலிருநது கொண்டு, மிகச் சிறிதாக உள்ள இன்பத்தை நுகர விரும்புகிறது. இதனை சம்பந்தர் தன் பாடல் வாயிலாக 
  செடி கொள் நோய் ஆக்கைஆம்
  பாம்பின்வாய் / தேரை / வாய் சிறு பறவை
  கடிகொள் பூந்தேன் சுவைத்து 
 இன்புறல் ஆம்  என்று கருதினாயே  "  என்கிறார் 
   2, மல பரிபாகம்
   உயிர்கள் பிறவியில் இருந்து நீங்க மலபரிபாகம் பெற வேண்டும், மல பரிபாகம் என்பது மலத்தின் ஆற்றல் தேய்தல் ஆகும். அதாவது ஆணவமலத்தின் காரியம் ஆகிய மோகம் என்று கூறப்படும் கெட்ட குணங்கள் ஆன்ம அறிவை விட்டு நீங்குதல் ஆகும்
  ஆன்மா வீபரீத உணர்வு / பொய்யை உண்மை என்றும், உண்மையை பொய் என்றும் திரியுணர்வை உண்மை என்றும் எண்ணிக்கொண்டும் இருப்பது. ஆக ஆணவம்(மலம் ) பரிபாகம் அடையாத போது பிறவியை துன்பம் என அறியாது அதில்உழலும். மலபரிபாகம் உயிரில் படிப்படியாக நிகழும்  அறிவு வளரும் முன்பு அறியாத துன்பத்தை அறியும் பிறவியிலிருந்துநீங்க விரும்பும்.
  3, சக்தி நிபாதம்
 சக்திநிபாதம் என்பது  திருவருட் சக்தி பதிதல் ஆகும். அதாவது சிவபெருமான் திருவடியை அடையவேண்டும் என்னும் நாட்டத்தால் ஆன்ம அறிவில் சிவசக்தி பதிதல்.
   சக்தி நிபாதம் என்னும் சொல்லுக்கு பொருள் சக்தியினது வீழ்ச்சி என்பதாகும். அதாவது ஒரு சபையில் ஒரு கல் வந்து வீழ்ந்தால்அந்த கல் அங்குள்ளவர்களை அந்த சபையிலிருந்து அங்குள்ளவர்களை அஞ்சி ஓட செய்தல் போல , ஆன்மாவிற்கு திருவடியை அடையவேண்டும் என்னும் சக்தி நிபாதம் நிகழ்ந்தால் அந்த சக்தி நிபாதம் அந்த ஆன்மாவை உலகப் பொருளிலிருந்து அஞ்சி ஓடி சற்குருவை தேடும்படி செய்யும்
  திரோதன சக்தியால் மலங்களை கூட்டி உயிர்களை பிறவித்துன்பத்தில் உழல்வித்து உயிர் நோயால் உள்ள ஆணவ மலம் வலிவிழந்து நீங்கும்நிலைமை ஏற்படும் போது திரோதன சக்தி அறக்குணமாக மாறும் அதுவே அருள் சக்தியாகி சக்தி நிபாதம் ஆகும். 
  4, இருவினை ஒப்பு 
ஒரு ஆன்மாவிற்கு சக்தி நிபாதம் ஏற்பட்டுவிட்டால் இருவினை ஒப்பு கிடைக்கும்
 இருவினை ஒப்பு என்பது நல்வினையின் பயனாக இன்பம்வரும் போது அதனை விரும்புதலும் தீவினையின் பயனாக துன்பம் வருங்கால்அதனை வெறுத்தலும், செய்யாமல் உணர்ச்சி வேறுபடாமல் அவ்விரண்டையும் ஒன்றுபோல நினைத்து பற்றின்றி நிற்கும் மனப்பான்மையே இருவினை ஒப்பு என்பது, ஓடும் செம்பொன்னும் ஒக்க வே நோக்குவர் என்கிறது பெரியபுராணம், இவ்வினை ஒப்பு முற்ற நிகழ்ந்த போதே இறைவன் குருவாய் வந்து ஞானத்தை அருள்வான். 
 5- பக்குவம்
   இருவினை ஒப்பு, மலபரிபாகம், சக்தி நிபாதம் இம்மூன்றும் ஒருங்கே நிகழும் நிலையில் பக்குவம் நிகழும், இதனைதான் ஆன்மா பக்குவம் அடையும் நிலை என்றும் பக்குவப்பட்ட ஆன்மா முக்தி நிலைக்கு தயாராகும் என்பர் அருளாளர்கள்
 6, உய்யும் நெறி °
   மந்த தரத்தி்ல் இறைவன் உயிருக்கு நிகழ்விப்பது உய்யும் நெறி,
 இதுவரை மறைப்பு சக்தியை (திரயோதன சக்தி) செலுத்திய இறைவர் உய்யும் பொருளாகிய அருள் சக்தியை செலுத்தி உய்வுக்குரிய நெறியில் செலுத்துவான் இறைவன்.
  சரயை, கிரியை, யோகம் ஆன தவ புண்ணியமாகிய சிவபுண்ணியம் தீட்சையால் தலைவர் சிவனார் என்னும் குருநாதர் மூலம் தீட்சை பெற்று சரியை, கிரியை, யோகங்களை செய்தல் 
 யோக நெறியில் அகபூசை செய்தல் 
 ஆக, உயிரில் நிகழும் பக்குவத்தை உயிருக்கு உயிராய் உள்ள இறைவன் அறிந்து அவரே ஞானாசிரியராக எழுந்தருளி ஞானத்தை வழங்குவார். இதுவே உயிர் வீடுபேறு உய்ய உள்ள வழிகள் 
திருச்சிற்றம்பலம்

வியாழன், 18 ஜனவரி, 2024

சைவ சித்தாந்தம் கூறும் சிறு விளக்கம்


 சைவ சித்தாந்தம் கூறும் சிறு விளக்கம்

1. உடலுக்கு வேறாக உயிர் என ஒரு பொருள் உண்டு.

2. அந்த உயிக்கு உள்ளாக இறைவன்  என்னும் மற்றொரு பொருள் உண்டு.

3. உயிர் பொருள்,உளளிருக்கும் இறைவன் உணர்த்துதல் வழியாகத்தான் தனது உடற் கருவிகளை இயக்கிக் கொண்டு இவ்வுலகில் வாழ்கிறது.

4. உயிரினை உலகியல் வாழ்வுக்கு உடந்தையாக ஆணவம், கன்மம், மாயை என்ற மும் மலங்கள் உள்ளன.

5. திருவருளால் இவற்றை ( மும் மலங்களை )சார்ந்து உயிர் வாழும் கட்டம் அவ்வளவும் பந்த நிலை, அல்லது பெத்த நிலை 

6.திருவருளால் இவற்றின் ெதாடர்பு நீங்கிச் சூட்சும உணர்வாகிய ஞான உணர்வினால் கடவுளை அடைந்து அனுபவிக்கும் நிலை மோட்ச நிலை (அல்லது ) சுந்த நிலை

7. இந்த சுத்த நிலை பேறு ஒவ்வாெரு உயிர்க்கும் உரியது. ஆனால் அதன் அதன் பக்குவ காலத்தில் மட்டும் அதற்தற்கு வாய்ப்பது

8. இவ்வகையில் சம்பந்தப்படும் பொருட்கள் மூன்று , அவை பதி,பசு, பாசம்

9. உண்மை அறிவியற் கோட்பாடுகளுக்கு முரண்படாத வகையில் இம் முப்பொருள் இயல்புகளை உரிய முறையில் கற்று கேட்டுத் தெரிபவர்கள் மெய்ஞானம் பெறுவர். அவர்களே மேல் கதிக்கும் வீடு பேற்றுக்கு உரியவர்.

10.வீடு பேறு என்பது உயிர் தன் சீவத் தன்னை கழிந்து, சிவத்தோடு ஏகமாய்நின்று அநுபவிக்கும் ஆராத ஓரு பேரின்ப நிலை.

திருச்சிற்றம்பலம்